காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!
காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று இரவு தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் அதிகாரி உட்பட 4 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.
காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே எனுமிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று இரவு ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படைப்பிரிவினர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் காவல்துறையின் சிறப்பு அதிரடிக் குழுவினர் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும், அவர்களை விடாமல் ராணுவ வீரர்கள் துரத்தியுள்ளனர். இதனையடுத்து இரவு 9 மணியளவில் வனப்பகுதிக்குள் தீவிரவாதிகளுடன் மோதல் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற 10 RR இன் மேஜர் பிரிஜேஷ் தாப்பா ஆவார். இந்த உயிரிழப்புகள் குறித்து இந்திய ராணுவம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
20 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்த இந்த சண்டையின் போது ராணுவ வீரர்கள் 4 பேர் உட்பட காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளனர். பின்னர் 5 பேரின் நிலையும் மிக மோசமானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் வனப்பகுதிக்குள் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவத்தின் 16-வது கார்ப்ஸ் பிரிவின் ஒயிட் நைட்ஸ் படைப்பிரிவு எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஜம்மு பகுதியில் ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த வாரம் கதுவாவில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது ஜம்முவில் 4 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.