ஜம்மு காஷ்மீரின் "தால்" ஏரி படகு வீடுகளில் தீவிபத்து - 3பேர் உயிரிழப்பு.!
ஜம்மு காஷ்மீரின் "தால்" ஏரி படகு வீடுகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பிரபல சுற்றுலாத் தலமான தால் ஏரி பகுதி உள்ளது. இந்த ஆற்றில் படகு வீடுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்குவது வழக்கம். இந்த நிலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் வெளிநாட்டினர் 3 பேர் உயிரிழந்தனர்.
சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் நேரிட்ட இந்த விபத்தில் 5 படகுகள் மற்றும் அவற்றையொட்டிய பிற படகுவீடுகள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர், அவசர கால படையினருடன் உள்ளூர் மக்களும் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
ஒரு படகில் வெப்பமூட்டும் சாதனத்தில் ஏற்பட்ட பழுதால் தீப்பிடித்து, மற்ற படகுகளுக்கும் தீ பரவியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எரிந்த படகுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெளிநாட்டினர் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவை அடையாளம் தெரியாத அளவில் கருகியிருந்தன.
இறந்தவர்களில் ஒருவர் பெண் என்றும், மூவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மரபணு சோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தால் ஏரியில் கடந்த ஆண்டும் இதேபோன்ற பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 படகுகள் எரிந்து சேதமடைந்தன. எனினும், உயிர்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.