ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவுக்கு நடுவே ரயில் செல்லும் காட்சி - ரயில்வே அமைச்சகம் பகிர்ந்த வீடியோ!
ஜம்மு காஷ்மீரில் பனிக்கு நடுவே ரயில்கள் செல்லும் வீடியோவை இந்திய ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ளது.
இந்தியாவின் வட எல்லையான காஷ்மீர் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது. இதனால், அங்கு எப்போதுமே தட்பவெப்ப நிலை குளிராக இருக்கும். ஆண்டு முழுவதுமே குளிர்ச்சியான சூழலே காணப்படும். குறிப்பாக குளிர் காலம் வந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக அமையும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை அங்கு குளிர் காலம் என்பதால் வெப்ப நிலை உறை நிலைக்கு சென்று விடும்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஜீரோ டிகிரிக்கு கீழ் வெப்பநிலைக்கு சென்றது. தற்போது காஷ்மீரில் பருவமழை வழக்கத்திற்கு மாறாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு வழக்கமாக நிலவும் குளிருக்கு பதிலாக தற்போது வெப்ப நிலை சற்று அதிகரித்துள்ளதாக காஷ்மீர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பனி மூடிய ஜம்மு மற்றும் காஷ்மீர் வழியாக ஒரு ரயில் செல்லும் அழகிய காட்சியை இந்திய ரயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், “இந்திய இரயில்வேயில் பனி படர்ந்த ஜம்மு மற்றும் காஷ்மீரின் பிரமிக்க வைக்கும் காட்சியை அனுபவிக்கவும்” என தலைப்பிடப்பட்டு பகிரப்பட்டுள்ளது.