ஜம்மு-காஷ்மீர் : சோன்மார்க் சந்தையில் பெரும் தீ விபத்து !
ஜம்மு-காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள சோன்மார்க் நகரின் சந்தைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ வேகமாகப் பரவியதால் அடுத்தடுத்து இருந்த பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
சோன்மார்க்கில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் சுமார் 20 முதல் 40 கி.மீ. தொலைவில் உள்ள குந்த் மற்றும் கங்கன் பகுதியிலிருந்து தீயணைப்புப் படையினர் வர வேண்டியுள்ளது. இதனால் தீ விபத்துகளில் ஏற்பட்ட சேதம் பலமடங்கு அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் நாசமாகின. எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதலமைச்சர் ஒமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சோன்மார்க் தீ விபத்து செய்தியறிந்து மிகுந்த வருந்தமடைந்தேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கிறேன். அவர்கள் மீண்டு வருவதற்கான அனைத்து ஆதரவும் அளிக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.