’ஜமா’ திரைப்படம் #AmazonPrime OTT-ல் வெளியாகிறது!
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை பேசும் திரைப்படமான ஜமா படத்தின் ஓடிடி வெளியீடு விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜமா’. இயக்குநர் பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த ‘Learn & Teach Production’நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும்போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது.
இத்திரைப்படத்தில் நடிகர்கள் சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஜமா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இத்திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.