நாளை #BCCI உயர்மட்டக்குழு கூட்டம் - ஜெய்ஷா பதவி விலகுவாரா?
பிசிசிஐ-யின் உயர்மட்டக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் ஜெய்ஷாவுக்கு பதில் புதிய செயலாளரை நியமிப்பது குறித்து எந்தவொரு விவாதமும் நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 93வது ஆண்டு பொதுக்கூட்டம் செப்டம்பர் 29-ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி முன்பாக நாளை பிசிசிஐ-யின் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி நிரலில் பிசிசிஐ செயலாளர் பதவிக்கான தேர்தல் குறித்து எதுவும் இடம்பெறவில்லை. இதனால் அன்று ஜெய்ஷா தனது செயலாளர் பதவியிலிருந்து விலகமாட்டர் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐசிசியின் தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக் காலம் வரும் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஜெய்ஷா டிச.1ஆம் தேதி ஐசிசி தலைவராக பதவியேற்க உள்ளார். 2 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் 3 முறை வகிக்கலாம். கிரெக் பார்க்லே தொடர்ந்து 2 முறை ஐசிசி தலைவராக உள்ள நிலையில், 3-வது முறை போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.
இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய் ஷா ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுவிட்டால், பிசிசிஐ செயலாளர் பதவி காலியாக இருக்கும். இந்நிலையில் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இந்நிகழ்ச்சியில் எந்த விவாதமும் நடைபெறாது என கூறப்படுகிறது.
பிசிசிஐ அடுத்த தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லீ தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரோகன் ஜெட்லீ உள்ளார்.