ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை - திருச்சி சிவா எம்பி
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவை பயிற்சியாளர்கள் குழுவிடம் பேசிய அவர்,
“ உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில் குடியரசுத் தலைவருக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாம் எங்கே போகிறோம்?. நாட்டில் என்ன நடக்கிறது?. நாம் மிகவும் உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். குடியரசுத் தலைவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார். இல்லையென்றால் அது சட்டமாகிறது.
அரசியலமைப்பின் கீழ் நீதிபதிகளுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3) இன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே. ஆனால் பிரிவு 142 ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல உச்ச நீதிமன்றம் மாற்றி உள்ளது” என தெரிவித்துள்ளார்.
துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்து பலராலும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தெரிவித்துள்ளதாவது..
ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் பங்கு குறித்த சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பிரிவு 142 ஐப் பயன்படுத்தி, அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி குறைத்து மதிப்பிட முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.
இந்தநிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைத் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை! இந்திய ஒன்றியத்தில் "சட்டத்தின் ஆட்சி" நிலவுகிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்.” என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்.