யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயர் மாற்றம் - ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு !
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை சென்றபோது அங்குள்ள யாழ்ப்பாணம் நகரில் 11 மில்லியன் டாலர் மதிப்பில் கலாச்சார மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த கலாச்சார மையத்தை 2023, பிப்ரவரி மாதம் அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதனிடையே இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு தற்போது திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை "திருவள்ளுவர் கலாச்சார மையம்" என பெயர் மாற்றம் செய்ததற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையத்தை "திருவள்ளுவர் கலாசார மையம்" என்று மறுபெயரிட்டிருப்பது, உலகம் முழுவதும் பழம்பெரும் வாழும் மொழி மற்றும் கலாசாரமான தமிழின் பெருமையைப் பரப்புவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல்கல்லாகும்.
இது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.