ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை | வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதாவிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். 2018-ம் ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை வெளிநாட்டிற்கு கடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரியவந்தது.
இந்நிலையில் மார்ச் 9-ம் தேதி போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனிற்கு ஜாபர் சாதிக்கை அழைத்து சென்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியாவிற்கு போதைப்பொருளை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கும் ஜாபர் சாதிக் போதைப்பொருளை கடத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனை மையமாக வைத்து அதிகாரிகள் ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா என்ற சதானந்த்தை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். திருச்சியைச் சேர்ந்த அவர் திருச்சி மற்றும் சென்னையில் ராகி மாவில் போதைப்பொருளை கலப்படம் செய்து கடத்தலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி கொண்டு செல்லப்பட்ட சதாவிடம் டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் சதா கடந்த 2013-ம் ஆண்டே சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.
மேலும் 2018-ம் ஆண்டு சூடோஎப்ரிடன் போதைப்பொருள் மலேசியாவிற்கு கடத்தப்பட்டது குறித்தும் அதன் மதிப்பு ரூ. 25 கோடி என்பதும், அதேபோல் 2019-ம் ஆண்டு ரூ.1.3 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.