பரமக்குடி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் பிரச்சாரத்தை தொடங்கினார் IUML வேட்பாளர் நவாஸ் கனி!
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட திருவிழாவில், திமுக தலைமையில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி இன்று (மார்ச் 27) தனது பிரச்சாரத்தை துவங்கினார். முதல் நாளான இன்று பரமக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் பால்குட பெருவிழாவில் கலந்து கொண்டு பக்தர்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
முன்னதாக ஆயிரவைசிய சபை தலைவர் ராசி என்.போஸ் மற்றும் சபை நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பிரச்சாரத்தின் போது தனது ஆதரவாளர்களுடன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு தேர்தல் பரப்புரை கையேடுகளை பொது மக்களிடம் வழங்கி தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவாக ஏணி சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.