For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தேசிய விருதுகளில் குழந்தைகள் படங்களுக்கான பிரிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது” - இயக்குநர் கமலக்கண்ணன் பேச்சு!

07:45 AM Oct 05, 2024 IST | Web Editor
“தேசிய விருதுகளில் குழந்தைகள் படங்களுக்கான பிரிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது”   இயக்குநர் கமலக்கண்ணன் பேச்சு
Advertisement

தேசிய விருதில் குழந்தை படங்களுக்கான பிரிவு இல்லை என்பது வருத்தமளிப்பதாகவும், இது போன்ற படங்களை புறக்கணிப்பது இயக்குநர்களை வருத்தமடைய செய்வதாகவும் குரங்கு பெடல் படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

புதுச்சேரி அரசு சார்பில், இந்திய திரைப்பட விழா அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நேற்று (அக். 4) துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி, வங்க மொழி படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லஷ்மிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து 2023-ம் ஆண்டின், புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட, குரங்கு பெடல் படத்தின் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு ‘சங்கரதாஸ் சுவாமிகள் விருது’ வழங்கப்பட்டது. மேலும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுக்கான காசோலையையும் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து இயக்குநர் கமலக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

“குரங்கு பெடல் படத்திற்கு புதுச்சேரி அரசு விருது வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளுக்கான படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு இந்த விருது ஊக்கமாக இருக்கும். இந்த திரைப்படத்தை புதுச்சேரி அரசு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரையிட வேண்டும். இந்த கோரிக்கையை முதலமைச்சரிடமும் வைத்துள்ளேன். இந்திய அளவில் பல ஆண்டுகளாக குழந்தை திரைப்படங்கள் குறைந்து வந்தாலும், தமிழில் தற்போது குழந்தைகளுக்கான படங்கள் அதிகரித்து வருகிறது.

மக்கள் பார்க்க பார்க்க இது போன்ற படங்கள் அதிகமாக வெளியாகும். தேசிய விருதில் குழந்தை படங்களுக்கான பிரிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அரசு விருதுகளில் இது போன்ற படங்களை புறக்கணிப்பது இயக்குநர்களை வருத்தமடைய செய்கிறது. குழந்தைகளுக்கான படங்களை இயக்குவதற்கு மாநில அரசுகள் மானியம் வழங்க முன்வர வேண்டும். கர்நாடக மாநிலத்தில் குழந்தைகள் படத்திற்கு ரூ.20 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சமூக அக்கறை, அரசியல் பேசாத திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை. வரும் காலங்களில் வரலாற்று திரைப்படங்களை இயக்குவதற்கான எண்ணங்கள் கண்டிப்பாக இருக்கிறது” என கமலக்கண்ணன் தெரிவித்தார்.

Tags :
Advertisement