“சினிமா டயலாக் போல் உள்ளது” - பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் பேசியதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி!
கடலூரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண் மற்றும் உழவர்
நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 1163
பயனாளிகளுக்கு 80.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவி வழங்கினார்.
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, 2026 திமுகவை அகற்றுவோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறிய கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, “ வேளாண் பட்ஜெட் தொடர்பாக அனைத்து மாவட்டத்திலும் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை உள்வாங்கியுள்ளோம் இது அனைத்தும் பட்ஜெட்டில் தெரியவரும்.
விஜய்யின் கருத்து சினிமாவில் வரும் டயலாக் போல் உள்ளது. பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் பங்கு என பல திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். பெண்களுக்கு சம உரிமை அளித்து அவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளது யார் என அனைவருக்கும் தெரியும்”
இவ்வாறு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.