உலக முதலீட்டாளர்கள் மாநாடு: காணொளி மூலம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ஒலிபரப்பு!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பணியிட வாய்ப்புகள் அதிகம் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது என காணொளி காட்சி மூலம் மாநாட்டை கண்டு களித்த தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ, மாணவியர் தெரிவித்துள்ளனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் காணொளி காட்சி வாயிலாக திரையிடப்பட்டது. இதில், ஒன்றாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காணொலி திரையிடப்பட்டது. இதனை கல்லூரி மாணவர், மாணவியர் ஆர்வமாக கண்டு களித்தனர். மேலும், மாநாட்டில் நடைபெறும் தொழில் சார்ந்த முதலீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் எந்தெந்த மாவட்டங்களில் வருகின்றது என்பது தொடர்பான தகவல்களையும் தெரிந்து கொண்டனர்.
மாநாட்டினை காணொளி காட்சி வாயிலாக கண்ட மாணவர் மாணவிகள் கூறுகையில்,
இதுபோன்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதும், அதனை நாங்கள் காண்பதும் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது. அத்துடன் எங்களுக்கான பணியிடங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதை காணும் போது மகிழ்ச்சியாக
உள்ளது என தெரிவித்தனர்.