#RainAlert | அடுத்த 2 மணி நேரத்திற்கு கொட்டப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழை காரணமாக தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் இதனால் தமிழ்நாட்டில் நாளை மறநாள் (நவ.26) முதல் 29ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.