“பெரிய நகரங்களில் நடப்பது வழக்கம்” - பெங்களூரு பாலியல் சீண்டல் சம்பவத்தில் உள்துறை அமைச்சரின் பதில்!
இந்தியாவில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டங்கள் கடுமையாக இல்லாததே குற்றங்கள் அதிகரிக்க காரணம் என பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவின் பிடிஎம் லேஅவுட் பகுதியில் இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து சென்ற இரு பெண்களை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார்.
அப்போது அந்த இரு பெண்களும் கத்தி கூச்சலிட்டதால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, மாநிலத் தலைநகரம் போன்ற பெரிய நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம் எனும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பரமேஸ்வரா,
“நான் தினமும் காவல் ஆணையரிடம் கவனமாக இருக்கவும், ரோந்து மூலம் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கவும் சொல்லி வருகிறேன். போலீசார் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். மாநில தலைநகரம், பெரிய நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம். அப்போது அது கவனம் ஈர்க்கப்படுகிறது. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்படும். இரவு நேரங்களில் ரோந்து பணியை அதிகரிக்க காவல் ஆணையரை அறிவுறுத்தியுள்ளேன்” என தெரிவித்தார்.
ஒரு உயர் பொறுப்பிலிருக்கும் அமைச்சரின் இந்த கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.