"வேற மாதிரி ஆயிடும்"... போராடிய மக்களை எச்சரித்த எஸ்.பி. - விருதுநகரில் பரபரப்பு!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (ஜூலை 1) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்தார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் விருதுநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் போராட்டம் செய்தால், "இதுக்கு மேல் ஆளுக்கு ஆள் கோஷம் போட்டீர்கள் என்றால் வேற மாதிரி ஆயிடும்.. ஒழுங்கா இருந்துட்டு உங்க வேலையை பாருங்க" என எச்சரிக்கை விடுத்தார். அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "என்ன ஆகிவிடும், துப்பாக்கியை எடுத்து சுடுவீர்களா? சுடுங்க" என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.