“திமுகவின் ஆட்சிக்காலம்தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என கூற வேண்டும்” - செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
“மக்களாட்சி மலர்ந்த பிறகு அமைந்த ஆட்சிகளில் திமுகவின் ஆட்சிக்காலம்தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று சொல்ல வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்குழு கூட்டத்தில் பேசியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச்செயலாளர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
“ஏழாவது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய இலக்கு. 200 தொகுதிகளில் நமது கூட்டணி வெல்லும். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி நமதுதான். என்னுடைய இந்த நம்பிக்கைக்கு ஆணிவேர் நீங்கள்தான். களத்தில் நாம் கொடுக்கும் உழைப்புதான், நமது வெற்றியை உறுதி செய்யும். உங்களுடைய உழைப்பை ஐம்பது ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். தேர்தல் என்று வந்தால் இரவு, பகல் என்று பார்க்காமல் உழைப்பவர்தான் உண்மையான திமுக தொண்டன்.
அசுர உழைப்பை கொடுத்து வெற்றியை எட்டிப் பறிக்க வேண்டும். கொள்கையை வென்றெடுக்க
உழைப்பை கொடுப்பதில் நமக்கு நிகர் யாரும் இல்லை. 1957-இல் இருந்து 2024 வரை தேர்தல் களத்தில் நாம் எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை. இமயமலை போன்ற தலைவர்களில் இருந்து எத்தனையோ பேர் நம்மை எதிர்த்திருக்கிறார்கள். எதிரில் நின்றவர்கள் எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த இயக்கம் மட்டும் எப்போதும் உறுதியாக இருக்கிறது.
ஏன் என்றால், இது எப்போதும் மக்களோடு இருக்கிறது. வெற்றி கிடைத்துவிட்டால் மமதையில் ஆடவும் மாட்டோம்; தோல்வி அடைத்துவிட்டால் துவண்டு உட்கார்ந்து விடவும் மாட்டோம்! நடுவில் பத்தாண்டுகள் நம்முடைய போராட்டம் எப்படிப்பட்டதாக இருந்தது? ஒருமுறை எதிர்க்கட்சியாக கூட வரவில்லை! சோர்ந்துவிட்டோமா நாம்? வீட்டுக்குள்ளேயே முடங்கி உட்கார்ந்து விட்டோமா? இல்லையே! ஒவ்வொரு நாளும் மக்களுடனே இருந்தோம்! மக்களுக்காகக் குரல் கொடுத்தோம்!
வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தோம்! வீதிக்கு வந்து மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடினோம்! புயல் – வெள்ளம் என்று எந்தப் பாதிப்பு வந்தாலும், முதல் ஆளாக ஓடிச்சென்று மக்களுக்கு உதவினோம்! இன்னும் பெருமிதத்தோடு சொல்ல வேண்டும் என்றால், கொரோனாவில் உலகமே முடங்கியபோது, வல்லரசு நாடுகளே முடங்கிக் கிடந்தபோது, லாக்டவுன் நேரத்திலும் மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்கள் வீடு தேடிச் சென்று உதவி செய்த ஒரே இயக்கம் திமுக. அதைச் சாதித்துக் காட்டியது தொண்டர்களாகிய நீங்கள்தான்.
நம்முடைய திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து, நாள்தோறும் மக்கள் நலத் திட்டங்களைப் பார்த்துப் பார்த்துச் செயல்படுத்தி வருகிறோம்! கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48, தோழி விடுதி என்று ஒரு நாள் முழுவதும் பட்டியல் போடும் அளவிலான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்!
அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்று தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள் என்று ஓய்வில்லாமல் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்! நான் சவால்விட்டுச் சொல்கிறேன்... இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் இவ்வளவு திட்டங்களை, இந்தளவிற்குச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறதா? நிச்சயம் கிடையாது!
கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஓயாமல் உழைக்கும் நமக்கு உற்சாகத்தைத் தருவது எது? தொடர் வெற்றிகள் தான்! அந்த வெற்றிக்கு காரணம், தமிழ்நாட்டு மக்களும், நம் கூட்டணி கட்சித் தலைவர்களும்தான்! 2019-இல் கொள்கைக் கூட்டணியாக சேர்ந்தோம்; தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் என்று அனைத்திலும் வெற்றிதான்! இந்த வெற்றிகள் மூலம் என்ன செய்கிறோம்? நாடு - நாட்டு மக்கள் – நாட்டின் பன்முகத்தன்மை – நம் மொழி, பண்பாடு – மதச்சார்பின்மை - இவற்றைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டம் – இதையெல்லாம் காக்கும் ஜனநாயக அரணாகத் தொடர்ந்து செயல்படுகிறோம்!
அதனால்தான் இந்த கொள்கைக் கூட்டணிக்கு எதிராகப் பலரும் அரசியல் கணக்கு போடுகிறார்கள்! நான் உறுதியாகச் சொல்கிறேன்... நம்முடைய கொள்கைக் கூட்டணிக்கு எதிராக அவர்கள் போடும் கணக்கெல்லாம் தப்புக் கணக்காகத்தான் ஆகும்! வெற்றிக் கணக்கு நம்முடைய கூட்டணிக்குத்தான். நம்மை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாகச் சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும்! அதுவும் சாதாரண வெற்றி அல்ல, சரித்திர வெற்றி பெறுவோம்!
தலைவரே சொல்லிவிட்டார்... வெற்றி சுலபமாக வந்துவிடும் என்று யாரும் மெத்தனமாக இருக்கக் கூடாது! 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அது எளிமையாக வராது! அதற்கு, இங்கு இருக்கும் அனைவரும் ஒரு உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்! “200 தொகுதிகளில், என்னுடைய சட்டமன்றத் தொகுதி முதலாவதாக இருக்க வேண்டும், என் தொகுதிதான் அதிக முன்னிலை பெற்ற தொகுதி என்று வர வேண்டும், என் மாவட்டத்தில், என் மாநகராட்சியில், என் ஒன்றியத்தில், என் பகுதியில், என் பேரூரில், என் ஊராட்சியில், என் வார்டில்தான் அதிக முன்னிலை வாங்கியது” என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்!
நான் மேடைக்கு மேடை நம்முடைய திட்டங்களைப் புள்ளி விவரங்களோடு சொல்கிறேன்… மக்களுக்குத் தெரியுமே என்று எடுத்துச் சொல்லாமல் நாம் அமைதியாக இருந்துவிடக் கூடாது! நமக்கு எதிராக நம்முடைய எதிரிகள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் - பொய்ச் செய்திகள்! அவதூறுகள்! இதற்கு எதிரான நம்முடைய ஆயுதம் – நம்முடைய ஆட்சியின் சாதனைகளும், நம்முடைய கொள்கைகளும்தான்! நம்முடைய சாதனைகளைத் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொடுவது போன்று உங்கள் பாணியில் சொல்லுங்கள்…
களப்பணிக்கு, கட்சிப்பணிக்கு, வெற்றிப்பணிக்குத் தொண்டர்களைத் தயார்படுத்த வேண்டிய பணியை, செயற்குழு உறுப்பினர்களான நீங்கள் இன்றைக்கே தொடங்க வேண்டும்! 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நம் இயக்கத்தை ஏழாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க வைக்க உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்! தொண்டர்களை காக்க வேண்டிய கடமை அமைச்சர்களுக்கும்,
மாவட்டச் செயலாளர்களுக்கும்தான் இருக்கு!
இந்த செயற்குழுகூட்டம் நடக்குற அறிவாலயத்த கூட, இதுவரை ஒரு முறைகூட பாக்காம இருக்கிற கடைக்கோடித் தொண்டனையும் நீங்க கவனமா பாக்கணும். அவங்ககிட்ட அன்பா பேசணும். அவங்க உழைப்பை மதிக்கணும். அதைத்தவிர வேற எதையும் அவங்க பெருசா
எதிர்பாக்கல. திரும்பத் திரும்ப நான் இதையெல்லாம் சொல்லக் காரணம்… வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் நாம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம்! பொய்ப் பரப்புரைகள், அவதூறுகளைப் புறந்தள்ளி நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நமக்கு வெற்றியை வழங்கியிருக்கிறார்கள்!
அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று துடித்தவர்களுக்கு இந்தியா கூட்டணி மூலம் ஜனநாயகக் கடிவாளம் போட்டிருக்கிறோம்! அதுதான் நம்முடைய இயக்கத்துக்கும் - உங்களுக்கும் - எனக்குமான பெருமை! கொஞ்சம் நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒரு வாக்கு சதவிகிதக் கணக்கை சொல்கிறார்! அம்மையார் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திருவாளர் குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சுவது போன்று அது இருக்கிறது. 'காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டும்' பழனிசாமி - “கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வாக்கு சதவீதம் 1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது” என்று உளறி இருக்கிறார். அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அ.தி.மு.க.காரர்களே கேட்டு சிரிக்கிறார்கள்.
பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பா.ஜ.க.வைக் கண்டித்தாரா? புரட்சியாளர் அம்பேத்கரைக் கொச்சைப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகக் கீச்சுக்குரலிலாவது கத்தினாரா? பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு அவருக்கு இருக்கிறதா? கிடையாது. திமுக என்றால் மட்டும் சட்டமன்றத்திலும், வெளியிலும் கத்திப் பேசுகிறார். கத்திப் பேசினால் தன்னை ஜெயலலிதா என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறார். எம்.ஜி.ஆர் போல் தன்னுடைய கட்சிக்காரர்கள் அவரை நினைப்பார்கள் என்று நம்புகிறார். பழனிசாமி அவர்கள் என்னதான் கத்தினாலும், எப்படித்தான் கதறினாலும் அவருடைய துரோகங்களும், குற்றங்களும்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.
துரோகத்தைத் தவிர உங்களுக்குப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது? திமுகவின் வரலாறு தியாகம். பழனிசாமியின் வாழ்க்கை முழுவதும் துரோகம். இவர்கள் கள்ளக் கூட்டணியாக வந்தாலும் சரி – நேரடிக் கூட்டணி அமைத்து வந்தாலும் சரி; தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் இவர்கள் பேராபத்தானவர்கள் என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்! நாம் ஏன் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று சொல்கிற அதேநேரத்தில் - யார் ஆட்சிக்கு வரக் கூடாது; ஏன் அவர்கள் வரக் கூடாது என்றும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்!
அதிமுக, பாஜக, புதிது புதிதாக முளைக்கும் கட்சிகளுக்கு கிடைக்கும், ஊடக சொகுசு நமக்கு ஒருபோதும் கிடைக்காது! இது இன்று நேற்றல்ல… 75 ஆண்டுகளாக நாம் எதிர்கொள்ளும் சவால். அந்த சவாலையும் சாதனையாக்கித்தான் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது. நம்முடைய சொல்லாற்றல் - எழுத்தாற்றல் - மக்கள் நலன் ஆகியவற்றை நம்பித்தான் நாம் செயல்பட வேண்டும்!
நம்மை எதிர்ப்பவர்கள் அனைவருமே நமக்கு எதிரியாக இருக்கத் தகுதியுடையவர்கள் இல்லை; தங்களுக்குக் கவனம் கிடைக்க வேண்டும் என்று ஆர்வக் கோளாறில் நம்மை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள்! அவர்களின் கவனச் சிதறல்களுக்கு ஆளாகிவிடாதீர்கள்... உண்மையான எதிரிகளை வீழ்த்த உங்கள் ஆற்றலைச் செலவிடுங்கள்! தேர்தலை எதிர்கொள்ள வியூகம்தான் அவசியம்.
எனவே, சில அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் இந்தத் தருணத்தில் வழங்க விரும்புகிறேன். மகளிரிடம் நம்முடைய ஆட்சி மேல் பெரும் நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் நம்முடைய ஆட்சி மேல் பெரிய மதிப்பு வைத்திருக்கிறார்கள். அதை முழுமையாக நமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்ற வேண்டும்! புதிய வாக்காளர்களான இளைஞர்களின் நம்பிக்கையையும் - மனதையும் வெல்ல வேண்டும்! அதற்கு, அவர்களுக்கான மொழியில் பேச வேண்டும்! தொடர்ந்து டிரெண்ட்-இல் இருக்க வேண்டும்!
திமுக இயக்கத்தால் கடந்த 75 ஆண்டுகளில் தமிழ்நாடு எப்படி முன்னேறி இருக்கிறது, ஒவ்வொரு குடும்பத்திலும் எப்படிப்பட்ட மாற்றத்தை இது கொண்டு வந்திருக்கிறது என்று இளம் தலைமுறையினரிடம் கொண்டு போக வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாக மாற வேண்டும்! தி.மு.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவர் முன்பும் இருக்க அடிப்படைக் கடமை இது.
கட்சிக்குப் பவள விழா கொண்டாடி இருக்கோம்! வெள்ளி விழா – பொன் விழா – பவள விழா கண்டபோதெல்லாம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இந்த இயக்கம், நூற்றாண்டு காணும் போதும், ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும்! இருக்கும். அதுதான், தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தமிழினத் தலைவர் கருணாநிதிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!
தமிழ்நாட்டின் வரலாற்றில் சோழர்கள் ஆட்சியை பொற்காலம் என்று சொல்வார்கள். எதிர்காலத்தில் எழுதப்போகும் வரலாற்றில், மக்களாட்சி மலர்ந்த பிறகு அமைந்த ஆட்சிகளில் தி.மு.க.வின் ஆட்சிக்காலம்தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று சொல்ல வேண்டும்! தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தவர்கள் இந்த கருப்பு – சிவப்புக்காரர்கள் என்று சொல்ல வேண்டும்!
நம் முழக்கம், வெல்வோம் 200! படைப்போம் வரலாறு! வெல்வோம் 200! படைப்போம் வரலாறு!” என பேசினார்.