"ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது தேவையற்றது" - நயினார் நாகேந்திரன் பேட்டி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"மத்திய அரசு எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதா என்பது போன்ற நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் என்பது போல ஒரு மாயை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பத்து ஆண்டு கால ஆட்சியில் ஒரு இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் எதிர்ப்பு, குறை ஏற்பட்டால் சொல்லலாம். ஆனால் மாநில அரசு மத்திய அரசை இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பு அரசாங்கம் போல் உருவாக்கி வாக்கு வங்கி அரசியலை தேடிக்கொண்டிருக்கிறது என்பது
வருத்தத்திற்குரியது, வேதனைக்குரியது.
குறிப்பாக சட்டமன்றத்தில் கோஷம் போட்டது இதுதான் முதல்முறை என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வருவார்கள். ஆனால் ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது என்பது தேவையற்றது. முதலமைச்சர் தான் எல்லாருக்கும் நீதி வழங்கணும். முதலமைச்சரே நீதிமன்றத்திற்கு போனால் நாம் என்ன செய்வது? என்று தெரிவித்துள்ளார்.