“கட்சியில் அங்கீகாரம் பெறுவதற்காகவே... யாரும் தாக்கப்பட்டதாக தெரியவில்லை” - தவெக குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம்!
சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் மே 26) அன்று தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 குடிசைகள் எரிந்து நாசமாயின. இதற்கிடையில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு, அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்க தவெக நிர்வாகிகள் அப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது காவல்துறையினர் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக வெற்றிக் கழத் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பெருநகர சென்னை காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்,
“வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு, சில அமைப்பின் நிர்வாகிகள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளின் தொடர்ச்சியாக மற்றும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் அளித்த புகார்களின் பேரில் சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையாளர் கொடுத்த அறிக்கையின்படி, செய்திகளில் வெளியானது போன்று காவல்துறையினரால் மேற்படி அமைப்பின் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக தெரியவரவில்லை.
மேலும், அவ்விசாரணையில் ஒருசிலர் அவர்கள் சார்ந்த கட்சியில் அங்கீகாரம் பெறுவதற்காக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி வருவதாகத் தெரியவருகிறது. இருப்பினும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள துணை ஆணையாளர் (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு) நியமித்து உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.