”சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மாநில அரசின் உரிமை”- அன்புமணி ராமதாஸ்..!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”கர்நாடகத்தில் நடைபெற்று வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க அம்மாநில உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அம்மாநில அரசுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். சமூகநீதியைக் காக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டும் தான் மேற்கொள்ள முடியும் என்றும், மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லாததால் கர்நாடக அரசு நடத்தும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரி அகில கர்நாடக பிராமண மகாசபை என்ற அமைப்பு வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கர்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க எந்த காரணமும் இல்லை என்றும், கணக்கெடுப்புப் பணிகள் தொடரலாம் என்றும் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
பிகார் உயர்நீதிமன்றமும் இதே நிலைப்பாட்டைத் தான் மேற்கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மாநில அரசின் உரிமை; சமூகநீதியை பாதுகாக்க அது அவசியம் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன் பயன் தான் இதுவரை 4 மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டிருப்பதும், பல மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதும் ஆகும்.
ஆனால், தமிழகத்தை ஆள்பவர்களுக்கு மட்டும் தான் சமூகநீதியும் புரியவில்லை; சாதிவாரி கணக்கெடுப்பின் தேவையும் தெரியவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகாவது அவர்களுக்கு தெளிவு பிறக்க வேண்டும். இதற்குப் பிறகும் குழப்பம் இருந்தால் அரசுத் தலைமை வழக்கறிஞர் வாயிலாக உயர்நீதிமன்றத்திடம் கூட விளக்கம் பெற்றுக்கொண்டாவது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு முன்வர வேண்டும்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.