“தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு!” - எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!
தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிமையாக்கி அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு என்று, டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து 99 இடங்களில் வென்று தனிப்பெரும் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இதனை அடுத்து ராகுல் காந்தி மக்களவை எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்க வழிவகுக்கவில்லை என்ற போதும், கடந்த இரு மக்களவை தேர்தல் தோல்விகளை போல் அல்லாது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எழுச்சியை கொடுத்தது என்றே கூறலாம். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளேயும் பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஆளும் கட்சிக்கு ராகுல் காந்தி சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.
இந்நிலையில் தேர்தலுக்கு முன் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வந்தது போல், தற்போதும் பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது டெல்லியில் உள்ள ஜிடிபி நகரில் கட்டுமான தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர்களின் கோரிக்கைகள் என்ன? தொழிலாளர்களின் தேவைகள் என்னென்ன என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதனை அடுத்து இது தொடர்பாக தனது X தள பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, இந்த கடின உழைப்பாளிகள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு. தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிமையாக்கி அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.