"ஓட்டைகளை உருவாக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை கிடையாது" - சு.வெங்கடேசன் எம்.பி!
மதுரையில் இரண்டாவது ரயில் முனையமாக கூடல் நகர் ரயில் நிலையத்தை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "டிசம்பர் இறுதிக்குள் கூடல் நகர் ரயில் நிலையத்திற்கான இணைப்புச் சாலைகளை விரிவாக்கி, மின் விளக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறோம். டிசம்பர் கடைசி வாரம் இது போன்ற ஒரு கூட்டம் நடத்தப்படும். 5 ரயில்கள் இங்கே நிறுத்தப்படுகிறது. இது வரக்கூடிய காலங்களில் அதிகப்படுத்தப்படும்.
மதுரை மாநகர காவல் துறை கூடுதலாக ஒத்துழைப்பு தர வேண்டி உள்ளது. ரயிலிருந்து இறங்கி போக வேண்டிய பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது. வாகனம் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். 347 கோடி ரூபாய் செலவில் விரைவான விரிவான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. செல்லூர் பகுதியில் இணைப்பு சாலை மற்றும் மேம்பாலம் தேவை, மேம்பாலம் அமைக்கும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். ஆட்சியர் மற்றும் மாநகராட்சி, ரயில்வே அதிகாரிகளுடன் விரைவில் கூட்டம் அமையும்.
மதுரை ரயில் நிலையத்தில் மிகப்பெரிய பணிகள் நடைபெற்று வருவதால் அந்தப் பணிகள் நிறைவு பெற்றவுடன் இதற்கான திட்டமிடுதல் நடைபெறும். பயணிகளின் சிரமத்தை குறைக்க பார்சல் சர்வீஸ் வழியாக வரக்கூடிய சாலைகள் சிமெண்ட் சாலையாக மாற்றப்படும்.
பீகாரில் மூன்று லட்சம் வாக்காளர்கள் (இஸ்லாமியர்கள்) நீக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தை தங்களது கை பொம்மையாக இயக்குவதற்கு இவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை பாஜக வரவேற்கிறது. பாஜகவின் நடவடிக்கையை அதிமுக வரவேற்கிறது. இவர்கள் மூவரும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறார்கள். அதிமுக இன்று இருக்கும் நாளை இல்லாமல் இருக்கும் ஆனால் அதைப்பற்றி நமக்கு பிரச்சனை இல்லை, கட்சிகள் விழிப்போடு இருந்து இதை தடுப்போம் அது நம்முடைய கடமை.
ஓட்டைகளை உருவாக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை கிடையாது, ஓட்டைகளை அடைப்பது தான் தேர்தல் ஆணையத்தின் கடமை. இந்திய கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.