Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பேரவை விதிகளை மாற்ற ஆளுநர் விருப்பத்தை தெரிவித்தது முறையல்ல- சபாநாயகர் அப்பாவு!

01:47 PM Feb 12, 2024 IST | Web Editor
Advertisement

பேரவை விதிகளை மாற்றி தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதில் தேசிய கீதம் இசைக்க ஆளுநர் விருப்பம் தெரிவித்தது முறையல்ல என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார்.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கமால் 2 நிமிடங்களில் புறக்கணித்தார். உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாக தெரிவித்த அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார். ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். 

இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காத உரையை சட்டப்பேரவைக் குறிப்பில் முழுவதுமாக பதிவிடவும், ஆளுநருக்கு எதிராகவும் அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.

தொடர்ந்து, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,

“பிப்.13, 14 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான விவாதங்கள் நடைபெறும்.  பிப்.15-ம் தேதி விவாதத்துக்கான பதிலுரை வழங்கப்படும். பிப்.19-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், பிப்.20-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து 21, 22-ம் தேதிகளில் இரண்டு நிதிநிலை அறிக்கைகள் மீதான பொது விவாதம் நடைபெறும். 22-ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும்.

ஆளுநருடைய சொந்த கருத்துகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.  பேரவை விதி 176(1)ன் படி சட்டமன்ற நிகழ்வுகள் தொடங்கும்போது, முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.  அடுத்து ஆளுநர் உரை,  நிறைவாக தேசிய கீதம் பாடப்படும்.  பேரவை விதிகளை மாற்றி தேசிய கீதம் இசைக்க ஆளுநர் விருப்பம் தெரிவித்தது முறையல்ல. இறுதியில் தேசிய கீதத்தையும் அவமதித்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஆளுநரை அழைத்து சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. பல மாநிலங்களில் ஆளுநரை அழைப்பதே இல்லை. ஆனால் இங்கே நாம் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள். கொள்கை, சித்தாந்த ரீதியாக பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மரபை கடைபிடித்து வருகிறோம்.

ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான எந்த செய்தியும் இல்லை. ஆனால் ஆளுநர் முதல் பத்தியையும், கடைசி பத்தியையும் மட்டும் வாசித்துவிட்டு நிறுத்திவிட்டார். நாம் தமிழ்நாடு முழுவதுமே முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுகிறோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை விட தேசப் பற்றாளர்களோ, சுதந்திரத்துக்காக தியாகம் செய்தவர்களோ எங்கு இருக்கிறார்கள்? சிப்பாய் கழகம் வேலூரில் தான் நடந்தது.

ஆளுநர் உரையில் எந்தெந்த இடத்தில் குறைகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுவதற்கு பதில், இதில் எழுதியிருப்பது எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை என்றால் எப்படி? மிகப்பெரிய இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு உள்ள மாநிலம் தமிழ்நாடு. இங்கே ஒரு மரபு உள்ளது. அதை ஏன் மாற்ற வேண்டும்?” இவ்வாறு சபாநாயகர் பேசினார்.

Tags :
AppavuBudgetGovernorNews7Tamilnews7TamilUpdatesRN Ravispeakerspeechtamilnadu assemblyTN Assembly
Advertisement
Next Article