Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டிருப்பது நியாயமல்ல... உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்" - தேசிய மருத்துவர் தினத்தில் தவெக வலியுறுத்தல்!

மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது. 
06:11 PM Jul 01, 2025 IST | Web Editor
மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது. 
Advertisement

தன்னலம் பாராமல், அர்ப்பணிப்பு உணர்வோடு உயிர் காக்கும் மகத்தான சேவை புரிந்து வரும் மருத்துவர்களை நம்ப வைத்து ஏமாற்றாமல், கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக அரசை தவெக வலியுறுத்தியுள்ளது.

Advertisement

இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"உயிர் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சார்பில் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, அரசு மருத்துவர்களின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறது. நோய்த்தொற்றுப் பேரிடர்க் காலத்தில் மருத்துவர்கள் அனைவரும் தங்களின் உயிரைத் துச்சமென நினைத்து மக்களைக் காத்து வருகின்றனர். குறிப்பாக, கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நோய்த்தொற்று ஏற்பட்ட காலங்களில் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களுடைய குடும்பத்தைப் பிரிந்து, உயிரை ஒரு பொருட்டாகக் கருதாமல், மக்களைக் காப்பதே தங்களின் தலையாய பணி என அர்ப்பணிப்போடு சேவையாற்றினர்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்படும் என்றும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அரசு மருத்துவர்களை நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, வழக்கம் போல அனைத்துக் கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டது போலவே அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டுள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவர்களுக்கான ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், ஊதியத்திற்காக மருத்துவர்களைத் தொடர்ந்து போராட வைக்கும் ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு மட்டுமே உள்ளது என்பது தான் வருத்தமான உண்மை என்றும் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும், நோயாளர்களின் வருகைக்கு ஏற்ப மருத்துவர்களின் பணியிடங்களை அதிகரித்து, அப்பணியிடங்களுக்குப் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றும் அரசு மருத்துவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஆனால் எதிர்க்கட்சியாக இருந்த போது வாக்கு வங்கிக்காக அரசு ஊழியர்கள் பக்கமும், அரசு மருத்துவர்கள் பக்கமும் நின்ற தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முழு அளவில் அவர்களுக்கு எதிரானவராக மாறி, தன்னுடைய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டிருப்பது நியாயமல்ல. எனவே உயிர் காக்கும் உன்னத சேவையாற்றி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றித் தர வேண்டும் என இந்தத் தேசிய மருத்துவர்கள் தினத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
DMKDoctorsLatest NewsNational Doctors DaytvkTVK Vijayvijay
Advertisement
Next Article