For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

12:02 PM Jan 09, 2024 IST | Web Editor
 பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது    முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Advertisement

பில்கீஸ் பானு வழக்கில்,  குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து,  குற்றவாளிகள் இரண்டு வாரத்திற்கும் சிறை அதிகாரிகள் முன்பு சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது.  இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.  குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது,  அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து,  நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள்,  எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை - நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:  அரசுப் பேருந்தை இயக்கிய அனுபவமற்ற ஓட்டுநர் – நடுவழியில் நின்ற பேருந்தை தள்ளிச் சென்ற பயணிகள்! 

"நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்;  என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்;  ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன்.  இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.

நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி,  பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement