'ஒரு பதவியைக் கேட்டுப் பெறுவதை விட, உயிரை விடுவது மேலானது' - சிவராஜ் சிங் சௌஹான்..
'கட்சி தலைமையிடம் சென்று ஒரு பதவியைக் கேட்டுப் பெறுவதைவிட, உயிரை விடுவது மேலானது என்றே நான் கருதுகிறேன்' என சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தொடர்ந்தது. இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் 4 முறை முதலமைச்சராக பதவி வகித்த சௌஹான், இந்த முறை முதலமைச்சர் பதவிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த மோகன் யாதவை முதலமைச்சராக பாஜக தலைமை தேர்வு செய்தது.
மோகன் யாதவுக்கு சிவராஜ் சிங் சௌஹான் வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடன் சென்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், போபாலில் நேற்று (டிச.12) செய்தியாளர்களிடம் பேசிய சௌஹான், இப்போது வரை கட்சி எனக்கு அளிக்கும் பணிகளை மட்டுமே நான் செய்து வருகிறேன். கட்சித் தலைமையிடம் சென்று ஒரு பதவியைக் கேட்டுப் பெறுவதைவிட, உயிரைவிடுவது மேலானது என்றே நான் கருதுகிறேன்.
எனக்காக இதைச் செய்து கொடுங்கள் என்று கட்சியிடம் நான் இதுவரை எதுவும் கேட்டதில்லை. இனிமேலும் அதுபோன்று கேட்க மாட்டேன். நான் ஒருபோதும் முதல்வர் பதவிக்கான போட்டியில் என்னை முன்னிறுத்திக் கொண்டதில்லை.
பாஜக என்பது உயர்வான நோக்கங்களுடன் செயல்படும் கட்சி. இங்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பொறுப்பு அளிக்கப்படுகிறது. எனக்கு ஒதுக்கப்படும் பணியை மட்டுமே நான் செய்து வருகிறேன். மோகன் யாதவ் தலைமையிலான புதிய அரசு வாக்குறுதிகளை முடிந்த அளவுக்கு விரைவாக நிறைவேற்றும். அதற்கு நான் பக்கபலமாக இருப்பேன். பிரதமர் மோடியின் ஆசியுடனும், கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பாலும் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மாநிலத்தை அனைத்து நிலைகளிலும் வளர்ச்சியடைந்ததாக பாஜக அரசு மாற்றியுள்ளது என்றார்.