For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சட்டப்பேரவையில் மாநில அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நமது நாட்டின் பாரம்பரியம்” - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!

“மாநில சட்டப்பேரவையில் அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நமது நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம்” என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
10:08 PM Feb 04, 2025 IST | Web Editor
“சட்டப்பேரவையில் மாநில அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நமது நாட்டின் பாரம்பரியம்”   நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது;

Advertisement

நாடாளுமன்றத்தில் எதிர்மறையான கருத்துக்களை சொல்வது இயல்பான ஒன்றுதான். எனது மனப்பூர்வமான நன்றியை நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசு தலைவர் உரை மீதான தீர்மான விவாதத்தில் கலந்து கொண்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

21ம் நூற்றாண்டின் கால் பகுதியை தான் நாம் கடந்துள்ளோம். இந்த நூற்றாண்டின் கால் பகுதிகளில் 75வது சுதந்திர தினத்தை நாம் எப்படி பார்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான நம்பிக்கையை குடியரசுத் தலைவர் தனது உரையின் மூலம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்.

நமது நாட்டை வலிமையான புதிய நாடாக மாற்றுவதற்கான நம்பிக்கையை குடியரசுத் தலைவர் தனது உரையின் மூலம் வழங்கியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 25 கோடி மக்களை மிக எளிதாக வறுமைக்கோட்டில் இருந்து வெளியே கொண்டு வரவில்லை. இது திட்டமிடப்பட்ட மிகப்பெரிய விஷயம் ஆகும்.

நாம் தவறான பொய்யான முழக்கங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கவில்லை.  உண்மையை மட்டுமே மக்களுக்கு கொண்டு செல்கிறோம். மத்திய அரசு ஒரு ரூபாய் வழங்கினால் அது கிராமத்தை சென்றடையும் போது 15 பைசாவாக மட்டுமே சென்றடைகிறது என ஒருவர் பொது வெளியில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார். ஆனால் பா.ஜ.க ஆட்சி காலத்தில் மக்களுக்கான திட்டங்களில் மத்திய அரசின் நிதி நேரடியாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

உண்மையில் ஒரு காலத்தில் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை ஒரே கட்சி தான் ஆட்சியில் இருந்தது. எரிபொருள்களில் எத்தனால் கலக்கக்கூடிய மத்திய அரசின் முடிவால் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. சேமிக்கப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தில் விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. முன்பு எல்லாம் செய்திகளின் தலைப்பு செய்திகளில், ஊழல் நடைபெற்றிருக்கிறது, இத்தனை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என இடம்பெறும்.

ஆனால் இப்போதெல்லாம் மத்திய அரசால் இவ்வளவு ரூபாய் மிச்சம் செய்யப்பட்டுள்ளது, இவ்வளவு தொகை திட்டங்களுக்கு செலவு செய்யப்படுகிறது என்றே தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகிறது. பல திட்டங்கள் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் மிச்சம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்ணாடி மாளிகையை கட்டிக் கொள்ள நாங்கள் திட்டமிடவில்லை. மாறாக இந்தியாவை கட்டமைக்க திட்டமிட்டு அதனை செயல்படுத்தி வருகிறோம்.

மக்கள் மருந்தகம் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களது மருத்துவ செலவுகளை சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு மிச்சம் செய்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் உள்ளிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல், மக்களுக்கு எப்போது சுத்தமான குடிநீர் கிடைக்கப் படுகிறதோ அப்போது மக்களுக்கு சிகிச்சைகள் தேவைப்படுவதில்லை எனும் சூழல் உருவாகிறது.

அதன்படி ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருவதால், மக்கள் மருத்துவ செலவினங்களை சேமித்து வருகின்றனர். நடுத்தர மக்களின் சேமிப்பை உயர்த்தக் கூடிய வகையில் வருமான வரித்துறையில் பல மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன்பு வருமான வரித்துறையில் எந்த மாற்றங்களும் செய்ததற்கான காட்சிகள் இடம் பெற்றதில்லை.

2014ம் ஆண்டுக்கு முன்பு மக்கள் சந்தித்த காயங்களில் இருந்து மெல்ல மெல்ல தற்போது மீண்டு வரத்தொடங்கியுள்ளனர். 2014ம் ஆண்டுக்கு முன்பு இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே வருமான வரி விலக்கு உச்ச வரம்பாக இருந்தது. ஆனால் இன்று 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன்பு மக்களுக்கு ஏற்பட்ட காயங்கள் இன்னமும் உள்ளது. அதனையும் முழுமையாக சரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

2014ம்ஆண்டுக்கு பின்னர் நாட்டு மக்கள், தங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். நாட்டின் இளைஞர்களுக்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது. சிலர் கேட்கிறார்கள் AI எப்படி உருவாக்க முடியும் என? ஆனால் இந்தியா AAI செயல்படுத்த உள்ளது. அதாவது, “Artificial Aspirational India”. வங்கிகளிலும் சேவைகள் பயன்பாட்டிற்காக AI தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கு முடிவு செய்திருக்கிறோம். ஆனால் சிலர் நாட்டின் இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர்.

சில கட்சிகள் நாங்கள் இதை செய்வோம், அதை செய்வோம் என பொய் வாக்குறுதிகளை இளைஞர்களிடம் அளிக்கிறார்கள். ஆனால் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என வாக்குறுதி அளித்தது. மீண்டும் பா.ஜ.க வெற்றி பெற்ற உடனே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் ஆளும் கட்சிக்கு மீண்டும் நடைபெற்ற தேர்தலில் இத்தனை இடங்கள் கிடைத்ததில்லை. மகாராஷ்டிரா மக்கள் எங்களை மீண்டும் ஆசிர்வதித்துள்ளனர்.

எங்களது அரசு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் பணியாற்றியுள்ளது. அரசியலமைப்பு மீதான பலமான நம்பிக்கையே எங்களை மக்களுக்கு பயனுள்ள திட்டங்களையும், முடிவுகளையும் எடுக்க வைத்துள்ளது. எங்களது அரசு ஒற்றுமையை வலுப்படுத்துவது, ஏழை, எளிய மக்களை பாதுகாப்பது எப்படி என்பதை செய்து கட்டியுள்ளது. நாங்கள் அரசியலமைப்பின் நம்பிக்கையின் படி நடந்து வருகிறோம்.

மாநில சட்டமன்றத்தில் அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நமது நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம். குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தின் உரையாற்றும்போது மத்திய அரசின் உரையை வாசிப்பது. இதைப்போல் மாநில சட்டமன்றங்களில் அந்தந்த மாநில அரசுகள் வழங்கும் உரையை மாநிலத்தின் ஆளுநர்கள் வாசிப்பதும் நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம் ஆகும். 50 ஆண்டுகளாக குஜராத் சட்டமன்றத்தில் ஆளுநர்கள் உரையாற்றியதை தான், முதலமைச்சராக குஜராத்தின் இருந்தபோது அதனை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு அதனை நாடு முழுவதும், அனைத்து நூலகங்களிலும் இடம்பெற செய்துள்ளேன்.

நாட்டில் 10 கோடி பெண்கள் சுய உதவி குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளனர். சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ள பெண்களுக்கு 20 லட்சம் ரூபாயில் உதவிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் பெண்கள் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதோடு சுயமான தொழில்களை தொடங்க முடியும்.

Tags :
Advertisement