“தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறுவது வடிகட்டிய பொய்” - டிடிவி தினகரன்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். நிரூபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,
“மத்திய பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு. தமிழகத்தை புறக்கணித்து விட்டார்கள் என கூற முடியாது. திமுக ஆட்சிக்கு வர பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார்கள். மக்கள் விரும்பாத காரணத்தினால் தான் டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சியில்தான் டங்ஸ்டன் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், திமுக டங்ஸ்டன் திட்டத்தை தங்களால் தான் கைவிட்டது போல தானாக சென்று சால்வை, மாலை பெற்றுக்கொள்வது முதலமைச்சருக்கு அழகல்ல.
திமுக சரியாக ஆட்சி செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு நிதி
ஒதுக்கவில்லை என கூறுகிறார்கள். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை என கூறுவது வடிகட்டிய பொய். முதலமைச்சர் குடும்பத்தை தவிர தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை. இதுவரை கேள்விப்படாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சீர்கெட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கூலிப்படைகள் அதிகரித்து உள்ளது.
அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றது. திமுகவை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய கட்சிகள் தனித்து நிற்காமல், ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுக மதவாத கட்சி கிடையாதா? அதுவும் மாதவாதம்தான். பாஜக- வை இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
பாஜக மதவாத கட்சி என்றால், 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில்
ஒரு மதத்திற்கு எதிராக என்ன செய்தார்கள்? எடப்பாடி பழனிசாமி பதவி வெறியால், தன் மீது வழக்குகள் வந்து விடக்கூடாது என்பதற்காக மறைமுகமாக திமுகவோடு ஒப்பந்தம் அமைத்துள்ளார். அதனால்தான் தேர்தலில் திமுகவிற்கு உதவி செய்யும் விதமாக எடப்பாடி பழனிசாமி தனித்துப் போட்டியிடுகிறார்”.
இவ்வாறு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.