”ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளது” - துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுக பதிலடி!
நாடாளுமன்ற மாநிலங்களவையின் 6வது பயிற்சித் திட்டத்தின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்ற துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், “குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகனையாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142ஐ மாறியுள்ளது. உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம்போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்?” என தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்பளித்ததை விமர்சிக்கும் வகையில் பேசினார்.
இந்த நிலையில் இது குறித்த ஆங்கில ஊடக செய்தியை பகிர்ந்த எக்ஸ் பயனர் ஒருவர் “துணை ஜனாதிபதி போன்ற அரசியலமைப்பு அதிகாரிகள் மற்ற நிறுவனங்கள் குறித்த தங்கள் கருத்துக்களில் துணிச்சலாக இருக்க முடியாது என்றும் அதற்கு பதிலாக, ஒழுக்கத்தின் அனைத்து வரம்புகளையும் தாண்டிய ஒரு தமிழக ஆளுநரை இப்போதே பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டு” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்த பயனரின் பதிவை Quote செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். அந்த Quote பதிவில், “நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எதிர்க்கட்சி அரசாங்கங்களை குறைமதிப்பிடவும், வலதுசாரி கதைகளை பொது விவாதத்தில் புகுத்தும் ஆளுநர்கள், துணை குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அரசியலமைப்பு அலுவலகங்களை அரசியல்மயமாக்குவதில் தற்போது பலவீனம் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின்படி அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்பட வேண்டும். சம்பிரதாயபூர்வமாக நியமிக்கப்படுபவர்களால் அல்ல. யாரும், எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத்திற்கு மேலே இருக்க முடியாது. இதையே நமது உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் அதன் வரலாற்றுத் தீர்ப்பு செயல்முறையை மீட்டமைப்பதற்கான ஒரு படியாகும். இது பல ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளது . இந்த மாற்றம் துணிச்சலான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் காலத்தின் தேவையாக உள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.