இஸ்ரேல் அமைச்சர் இடைநீக்கம்!
இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹு அமைச்சரவை பொறுப்பிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹு, காஸா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அவரை இடைநீக்கம் செய்து இஸ்ரேல் அறிவித்துள்ளது. அமிஹாய் எலியாஹு பேச்சுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அமைச்சரவையிலிருந்து எலியாஹு நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், அமைச்சர் அமிஹாய் எலியாஹுவின் பேச்சு உண்மைக்கு புறம்பாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) அப்பாவிகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச சட்டத்தின்படி செயல்படுகின்றன. நாங்கள் வெற்றி பெறும் வரை இதனைத் தொடர்வோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
தனது கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தான் சொன்னவை தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், தனக்கு எதிராக திரிக்கப்பட்டதாகவும் அமிஹாய் எலியாஹு விளக்கம் அளித்திருந்தார்.