இன்று அமலுக்கு வருகிறது இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்!
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாக கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் மஜித் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார்.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினர், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனர். அத்துடன், அங்கிருந்து 200-க்கும் மேற்பட்டவர்களை அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். அதிலிருந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 46,899 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையில் கடந்த ஜன. 16 உடன்பாடு எட்டப்பட்டது.
அந்த ஒப்பந்ததுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை நேற்று முந்தினம் (ஜன. 17) ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், இஸ்ரேலின் முழு அமைச்சரவையும் ஒப்பந்தத்துக்கு நேற்று (ஜன. 18) இறுதி ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து அது இன்று (ஜன. 19) அமலுக்கு வருவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாக கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் மஜித் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
The State of Qatar announces, as part of the ongoing mediation, an agreement has been reached to extend the humanitarian pause for an additional two days in the Gaza Strip.
— د. ماجد محمد الأنصاري Dr. Majed Al Ansari (@majedalansari) November 27, 2023
“காஸா போர் நிறுத்தம் இன்று (ஜன. 19) காலை 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 12 மணி) அமலுக்கு வருகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிகாரிகளிடமிருந்து அறிவிப்புகள் வரும்வரை அவர்கள் பொறுமை காக்க வேண்டும்” என்று அந்தப் பதிவில் மஜித் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்த அமலாக்கத்தின் முதல்கட்டமாக, அடுத்த 6 வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க இருக்கிறார்கள். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.ஹமாஸ் விடுவிக்கும் பிணைக் கைதிகளில் முதியோர், நோய் வாய்ப்பட்ட ராணுவம் சாராதவர்கள், பெண்கள், குழந்தைகள், பெண் ராணுவத்தினர் ஆகியோர் அடங்குவர். பிணைக் கைதிகளாக உள்ள ஆண் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் இரண்டாவது கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் என்று முன்னர் கூறப்பட்டது.
இருந்தாலும், காஸாவிலிருந்து இஸ்ரேல் படையினர் முழுமையாக வெளியேறும்வரை எஞ்சிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று ஹமாஸ் தெரிவித்துவிட்டது. இந்த கைதிகள் பரிமாற்றம் இன்று (ஜன. 19) மாலை 4 மணி முதல் (இந்திய நேரப்படி மாலை 7.30 மணி) தொடங்கும் என்று எதிா்பார்க்கப்படுகிறது. இந்தப் பரிமாற்றத்தின்போது முதலில் ஹமாஸ் பிடியிலிருக்கும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகே பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.