காசாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்!
கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவம் இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று அங்குள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் உள்ள ஒரேயொரு தேவாலயம் இந்த கத்தோலிக்க தேவாலயம் தான்.
போரினால் வீடுகளை இழந்த மக்கள் இந்த தேவாலயத்தின் வளாகத்தில் தான் தங்கியுள்ளனர். தேவாலயத்தின் வளாகப் பகுதி மீதான இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் தேவாலயத்தின் மதில் சுவர் சேதமடைந்துள்ளது.
தேவாலயத்தில் ஏற்பட்ட தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், ”இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், மதத் தலங்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் தீங்கைக் குறைக்க அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், அவற்றுக்கு ஏற்பட்ட எந்தவொரு சேதத்திற்கும் வருந்துவதாகவும்" தெரிவித்துள்ளது.