காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் - குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழப்பு!
காசாவை நிர்வாகம் செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1000 திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 52,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த போரால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.
இதனிடையே, 15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வந்த போர், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டின் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை, ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து விடுவித்து வந்த நிலையில் பதிலுக்கு, பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து விடுவித்து வந்தது.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் அமைப்பினர் காசா மீது தொடர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், நேற்று முன் தினம் தங்கள் வசம் இருந்த பிணைக் கைதியான இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் ஈடன் அலெக்ஸாண்டர் என்பவரை ஹமாஸ் விடுதலை செய்தது. இந்த நிலையில் வடக்கு காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
காசாவில் உள்ள அகதிகள் முகாம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழள்ளனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 52 ஆயிரத்து 908 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.