For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… போலியோ முகாமிற்கு முன்னரே 49 பேர் பலி!

06:06 PM Sep 01, 2024 IST | Web Editor
போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… போலியோ முகாமிற்கு முன்னரே 49 பேர் பலி
Advertisement

காசாவின் நசீரத் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். கிட்டதட்ட 11 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரினால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளும், பெண்களும்தான் அதிகம் இறந்துள்ளனர். இதனிடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

இஸ்ரேலின் பயங்கரமான தாக்குதல்களால் காசா முழுவதும் உருக்குலைந்துள்ளது. போரால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, நோய் தொற்று அபாயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்காக, உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது.

அதற்காக இன்றுமுதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன. சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்தும் வழங்கினர்.

தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த சொட்டு மருந்து முகாம்களுக்கு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் தயாராக இருந்தனர். இச்சூழலில் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வான்வழித் தாக்குதலில், அகதிகள் முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஒன்றான நசீரத் பகுதியில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.

Tags :
Advertisement