காசாவில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தம் - இஸ்ரேல் அறிவிப்பு!
கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவ வசதி இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை காஸாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வந்தன. இந்த நிலையில் இஸ்ரேல் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய அறிக்கையின்படி, ”அல்-மவாசி, டேயர் அல்-பலா மற்றும் காசா நகரில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இஸ்ரேல் எந்த இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது. உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த வழித்தடங்கள் வழியாக எடுத்துச் செல்லலாம் மற்ற பகுதிகளில், வழக்கம் போல் தாக்குதல்கள் தொடரும். மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். காசாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக சில சிறப்பு வழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பானவை என அடையாளம் காணப்படும்”
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காசா முனையில் பொதுமக்களுக்கு இஸ்ரேல் போர் விமானம் வாயிலாக உணவு விநியோகம் செய்யப்பட்டது.