“அனைத்து மதங்களையும் மதிக்கவே இஸ்லாம் போதிக்கிறது” - தாலி குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பதில்
அனைத்து மதங்களையும் மதிக்கவே இஸ்லாம் போதிக்கிறது என தாலி குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பதில் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்... “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்?! சொத்துகள் ஊருடுருவல் காரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.
இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட அனைத்து கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவும் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், இஸ்லாமும் அல்லாவும் அனைவரையும் சமத்துவமாக நடத்தவே கற்று கொடுத்துள்ளது. பிற மதத்தினரை தாழ்வாக பார்க்க ஒரு போதும் இஸ்லாம் கற்றுக்கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக பிற மதத்தினரை சமமாக நடத்தவே கற்றுக்கொடுக்கிறது. ஒருவன் பெண்ணின் தாலியை பறித்தால் அவன் முஸ்லீம் இல்லை, இஸ்லாமியத்தை அறியாதவன். இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.