தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா ? அல்லது மதுவின் ஆட்சியா? பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி
மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன், தனக்கு வழங்கப்பட்ட மகிழுந்து பறிக்கப்பட்டதாக கூறி அலுவலகத்திற்கு நடந்து சென்றார். இதைத் தொடர்ந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியை திட்டமிட்டு அவமதிப்பதா? எனவும் தமிழ் நாட்டில் நடப்பது மக்களாட்சியா? அல்லது மதுவின் ஆட்சியா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”மயிலாடுதுறை மாவட்டத்தில் மது & போதை வணிகத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட மகிழுந்தை பறித்து, வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து செல்லும் நிலையை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையாகவும், கடமை உணர்வுடனும் செயல்பட்டதற்காக ஒரு காவல் அதிகாரியின் மகிழுந்தை பறித்து அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
கள்ளச்சாராய வணிகத்தையும், சட்டவிரோத மது விற்பனையையும் தடுக்கத் தவறியவர்கள் மீதுதான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அவற்றை தடுத்து நிறுத்திய ஓர் நேர்மையான காவல் அதிகாரி பழிவாங்கப்படுவது இதுதான் முதல் முறையாக இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? அல்லது மதுவின் ஆட்சியா? என்ற வினாதான் எழுகிறது.
பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படும் சுந்தரேசன் அவர் விரும்பும் இடத்தில் சுதந்திரமாக பணி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். பழிவாங்கும் நோக்குடன் அவர் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை உயரதிகாரிகளை அரசு தண்டிக்க வேண்டும். சுந்தரேசன் மீது இனியும் எந்த வித பழிவாங்கல்களும் கட்டவிழ்த்து விடப்படாமல் இருப்பதை தமிழக அரசும், காவலதுறை தலைமையும் உறுதி செய்ய வேண்டும் “
என குறிப்பிட்டுள்ளார்.