கங்கனா ரனாவத்தை தாக்கிய பெண் காவலரின் ட்விட்டர் (எக்ஸ்) கணக்கு உண்மையா?
This news fact checked by Logically Facts
நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த மத்திய பாதுகாப்பு படை பெண் காவலரின் ட்விட்டர் (எக்ஸ்) கணக்கு என வைரலாகிவரும் ஐடி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து வரும் ஜூன் 9 ஆம் தேதி மோடி பிரதமராக ஆட்சி அமைக்கவுள்ளார். இதுதொடர்பாக நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மண்டி தொகுதியின் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும், அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரிக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது திடீரென அந்த அதிகாரி, கங்கனாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, “@Kul_winderKaur' என்ற பயனர் ஐடியில், CISF அதிகாரியின் படத்துடன் 'Kulvinder Kaur CISF' என்ற பெயருடன் ஒரு பக்கம் ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் கவனம் பெற்றது. இந்த பக்கத்தில் கங்கனா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல பதிவுகள் பகிரப்பட்டிருந்தது. மேலும் இந்த பக்கத்தில் பதிவிடப்படும் பதிவுகளை ட்விட்டர் பயனர்கள் மறு ட்வீட் செய்யத் தொடங்கினர். மேலும் இந்த பக்கத்தை 23,900 க்கும் மேற்பட்ட ஃபாலோவர்கள் இருந்தனர்.
இதுகுறித்த உண்மை சரிபார்ப்பில், அந்தக் கணக்கு போலியானது மற்றும் அந்த பகக்த்தின் முந்தைய பெயர் '@SatypalMalikG' என்பது கண்டறியப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான அந்த பக்கத்தில் மே மற்றும் ஜூன் 2024 இல் உள்ள பழைய பதிவுகளை சரிபார்த்ததில், கணக்கின் முந்தைய பெயர் ‘@SatypalMalikG’ என கண்டறியப்பட்டது.
ஜூன் 1, 2024 அன்று, நியூஸ் 24 என்ற செய்திச் சேனலால் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு இந்த பக்கத்தில் மறுபதிவு செய்யப்பட்டிருந்தது. அதனை இங்கே காணலாம். மே 2024-ல் பதிவிடப்பட்ட பல பதிவுகள் இதே பயனர் பெயரைக் காட்டின. எனவே, பக்கத்தின் பெயர் '@SatypalMalikG' ஆக இருந்ததும், சமீபத்தில் ’@Kul_winderKaur’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.
மேலும், ’@SatypalMalikG’ என்ற பெயரை பயன்படுத்தி, ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தேடப்பட்டது. அப்போது, 'Kulvinder Kaur CISF' என்ற கணக்கு பதிலாக கிடைத்தது.
மேலும், ஒவ்வொரு கணக்கிற்கும் ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட எண் குறியீட்டான பயனர் ஐடியும் (1506590836267827200) சரிபார்க்கப்பட்டது. இறுதியில் அதுவும் பொருந்தும்படி அமைந்திருந்தது.
முடிவு:
CISF கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுரின் ட்விட்டர் (எக்ஸ்) கணக்கு என இணையத்தில் வைரலாகிவரும் கணக்கின் முந்தைய பெயர் ‘@SatypalmalikG’ என்பது கண்டறியப்பட்டது. மேலும் இது உண்மையில் குல்விந்தர் கவுரின் ட்விட்டர் கணக்கு இல்லை எனவும் நிரூபணம் செய்யப்பட்டது.
Note : This story was originally published by Logically Facts and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.