இதுதான் காரணமா? - இன்ஸ்டாகிராம் பக்கம் டிஆக்டிவேட் செய்யப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யுவன்!
தனது இன்ஸ்டாகிராம் பக்கம் டிஆக்டிவேட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து யுவன்சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘The Greatest of All Time’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் GOAT படத்தின் முதல் பாடல் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்பாடல் ஒரே நாளில் அதிக லைக், பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது.
என்னதான் இப்பாடலை விஜய் மற்றுன் யுவனின் ரசிகர்கள் கொண்டாடினாலும் சுமாரான பாடலை கொடுத்ததாக பலரும் இணையத்தில் யுவன் ஷங்கர் ராஜாவை மீம்ஸ்கள் மூலமாக கிண்டல் செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென டி ஆக்டிவேட் செய்யப்பட்டது. இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் விசில் போடு பாடலுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததால்தான் இன்ஸ்டாகிராம் பக்கம் டிஆக்டிவேட் செய்ததாக செய்திகள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது இன்ஸ்டாகிராம் டிஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் சரிசெய்யப்படும் எனவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.