Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உணவளிக்கும் கடவுள்கள் மீதான அக்கறை இதுதானா? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

மின் இணைப்புக்காக விவசாயிகள் ஆண்டுக்கணக்காக காத்திருக்கிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
11:19 AM Jul 15, 2025 IST | Web Editor
மின் இணைப்புக்காக விவசாயிகள் ஆண்டுக்கணக்காக காத்திருக்கிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. 4 லட்சத்திற்கும் கூடுதலான விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது.

Advertisement

திமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாட்டில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 4.50 லட்சம் விவசாயிகள் காத்திருந்ததனர். விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்போவதாக அறிவித்த திமுக அரசு அதை முறையாக செய்யவில்லை. 2021-22 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கும், 2022-23ஆம் ஆண்டில் 50 ஆயிரம் பேருக்கும் மின் இணைப்புகளை வழங்கிய திமுக அரசு, 2023-24ஆம் ஆண்டில் 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்ததில் 20 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் வழங்கியது. மீதமுள்ள 30 ஆயிரம் பேருக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கபடவில்லை.

2024-25ஆம் ஆண்டிலும், அதன் பின் நடப்பாண்டிலும் (2025-26) ஒருவருக்குக் கூட மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதற்கான காரணமும் திமுக அரசால் தெரிவிக்கப்படவில்லை. மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகளில் 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு விண்ணப்பம் செய்த விவசாயிகளுக்கு மட்டும் தான் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் 22 ஆண்டுகளாக விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, உடனடி மின் இணைப்பு பெறுவதற்கான தட்கல் முறையில் விண்ணப்பம் செய்ய முடியாத அளவுக்கு அதற்கான இணையதளம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்புக்கான விவசாயிகள் 22 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை நிலவுவதை மன்னிக்கவே முடியாது. உழவர்களுக்காக வானத்தை வில்லாய் வளைப்போம்; மணலை கயிராய் திரிப்போம் என்றெல்லாம் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் உண்மை.

தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால், கடந்த நான்கரை ஆண்டுகளில் குறைந்தது 10 லட்சம் விவசாயிகளுக்காவது மின்சார இணைப்பு வழங்கியிருக்க முடியும். ஆனால், அதில் 20%க்கும் குறைவாக 1.70 லட்சம் பேருக்கு மட்டும் தான் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மின் இணைப்புகள் வழங்குவதில் மட்டுமல்ல பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துதல், வேளாண் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்தல், கொள்முதல் நிலையக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் என அனைத்து விஷயங்களிலும் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

விவசாயத்திற்கென பெயரளவில் தனி நிதிநிலை தாக்கல் செய்தால் மட்டும் போதாது. வேளாண் வளர்ச்சிக்கும், உழவர்களின் முன்னேற்றத்திற்குமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால், உழவர்களின் நலன்கள் தொடர்பாக திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் 5% கூட நிறைவேற்றப்படவில்லை. உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் மீது திமுக அரசு காட்டும் அக்கறை இவ்வளவு தான். கடந்த நான்கரை ஆண்டுகளாக தங்களுக்கு துரோகம் செய்து வரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் உழவர்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ANBUMANIAnbumani RamadosscurrentDMKfarmersMKStalinPMK
Advertisement
Next Article