“வங்கதேச வன்முறையில் வெளிநாட்டு சதி உள்ளதா?” என ராகுல் காந்தி கேள்வி - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!
வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதுதொடர்பான வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர் போராட்டத்தையடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி நேற்று (ஆக., 5) அறிவித்தார்.
பிரதமர் ஷேக் ஹசீனா, தலைநகர் டாக்காவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வெளியேறி டெல்லி அருகே உள்ள ஹிண்டண் விமானப்படை தளத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்தடைந்தார். அவரை நேரில் சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வங்கதேச நிலவரம் குறித்து ஹசீனாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். டெல்லியில் வங்கதேச தூதரகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் நேற்று இரவே பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வங்கதேச நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கதேச நிலைமைகள் தொடர்பாக ஆலோசனை செய்ய டெல்லியில் இன்று (ஆக., 6) மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெ.பி.நட்டா, அமித்ஷா, ஜெய்சங்கர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் வங்கதேச நிலைமை, இந்தியர்களின் பாதுகாப்பு, இந்துக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவரிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “வங்கதேச நிலைமை தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய நிலையில் வங்கதேசத்தில் இருந்து 12,000 முதல் 13,000 இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டிய அவசர நிலைமை இல்லை. இருந்தாலும் நிலைமையை கண்காணித்து வருகிறோம். ஷேக் ஹசீனா தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கும் வரை மத்திய அரசு காத்திருக்க முடிவு செய்துள்ளது” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, “வங்கதேச வன்முறையின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளதா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “தற்போதைக்கு எதையும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது” என விளக்கம் அளித்தார்.