For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் உள்ள வக்ஃபு நிலங்கள் பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பை விட அதிகமா? - வைரலான பதிவு | #Fact என்ன தெரியுமா ?

09:14 AM Nov 16, 2024 IST | Web Editor
இந்தியாவில் உள்ள வக்ஃபு நிலங்கள் பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பை விட அதிகமா    வைரலான பதிவு    fact என்ன தெரியுமா
Advertisement

This News Fact Checked by ‘Factly’

Advertisement

இந்தியாவில் வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் மொத்த பரப்பளவு பாகிஸ்தானின் முழுப் பகுதியையும் விட அதிகம் என சமூக வலைதளங்களில் புள்ளி விவரங்கள் அடங்கிய பதிவுகள் வைரலானது. இதுகுறித்த உண்மை தன்மையை விரிவாக காணலாம்.

நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு ‘வக்ஃபு’ சொத்துகள் அர்ப்பணிக்கப்படுகின்றன. இந்தச் சொத்தை மற்றவர்களின் பெயருக்கு மாற்ற முடியாது. இந்தச் சொத்துகளை நிர்வகிக்கும் சட்டபூர்வ நிறுவனமாக மாநிலங்கள் அளவில் வக்ஃபு வாரியங்கள் உள்ளன. இந்நிலையில், எந்தவொரு வக்ஃபு சொத்தையும் கட்டாயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்தல், அரசு சொத்து வக்ஃபு சொத்தாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தால், அதை வக்ஃபு சொத்தாக கருத முடியாது உள்ளிட்ட அம்சங்களுடன் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தற்போது இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வக்பு சொத்துக்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலானது. அந்த பதிவில் இந்தியாவில் வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் மொத்த பரப்பளவு பாகிஸ்தானின் முழுப் பகுதியையும் விட அதிகம் எனவும் இந்தியாவில் உள்ள வக்ஃப் வாரியங்களின் சொத்துகளின் பரப்பளவு 9.40 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் , ஆனால் பாகிஸ்தானின் மொத்த பரப்பளவு 8.81 லட்சம் சதுர கிமீ ஆகும்" என சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

உண்மை சரிபார்ப்பு

இந்தியாவில் உள்ள வக்ஃப் வாரியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் பற்றிய தகவல்களை அறிந்திட பொருத்தமான முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இணையத் தேடலில் உட்படுத்தியபோது வக்ஃப் திருத்த மசோதா 2024 எனும் தலைப்பில் விவரங்கள் அடங்கிய தொகுப்பு 13 செப்டம்பர் 2024 அன்று பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (PIB) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதன்படி தற்போது, ​​இந்தியாவில் வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் 8.7 லட்சம் சொத்துகள் உள்ளன என்றும் அவை 9.4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சொத்துகளின் மதிப்பு சுமார் 1.2 லட்சம் கோடியாகும். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வக்ஃப் சொத்துக்கள் இந்தியாவிலேயே உள்ளது. அதேபோல பொதுத்துறை நிறுவனங்களான ராணுவம் மற்றும் இந்திய ரயில்வேக்கு அடுத்தபடியாக வக்ஃப் வாரியம் இந்தியாவில் மிகப்பெரிய நில உரிமையாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல 9.4 லட்சம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ள 8.7 லட்சம் சொத்துக்களை வக்ஃப் வாரியம் கட்டுப்படுத்துகிறது என்று பல செய்திக் கட்டுரைகளிலும் இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில், இந்தியாவில் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான மொத்த நிலம் 9.4 லட்சம் ஏக்கர் என்பது உறுதியாகியுள்ளது. மாறாக வைரலான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல 9.40 லட்சம் சதுர கி.மீ. இல்லை என்பது தெளிவாகிறது.

இதேபோல லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பாகிஸ்தானின் மொத்தப் பரப்பளவு தோராயமாக 8,81,913 சதுர கிலோமீட்டர்கள் என்றும் ஸ்வீடனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பாகிஸ்தானின் மொத்த பரப்பளவு 7,96,095 சதுர கிலோமீட்டர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பாகிஸ்தானின் மொத்த பரப்பளவு இந்தியாவில் உள்ள வக்ஃப் வாரியங்கள் வைத்திருக்கும் மொத்த நிலத்தை விட அதிகம் என்று ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளதால் இந்த பதிவு போலி என்பது உறுதியாகிறது.

முடிவு :

இந்தியாவில் வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் பரப்பளவு 9.4 லட்சம் ஏக்கர் ஆகும், இது சுமார் 3,804 சதுர கிலோமீட்டருக்கு சமம். எனவே வக்பு வாரிய சொத்துக்கள் பாகிஸ்தானின் மொத்த பரப்பளவை விட மிகக் குறைவு என்பதுதான் உண்மை

Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement