‘கேரளாவை விட உத்தரபிரதேச பேருந்து நிலையங்கள் நவீனமயமானது’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘India Today’
கேரளா மற்றும் உத்தரபிரதேச பேருந்து நிலையங்களை ஒப்பிடும் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
கேரளா மற்றும் உத்தரபிரதேசத்தின் வளர்ச்சியை ஒப்பிட்டு ஒரு படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த படம் பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தை உத்தரபிரதேசத்தில் உள்ள நவீன பேருந்து நிலையத்துடன் ஒப்பிடுகிறது. அதில், பத்தனம்திட்டாவில் உள்ள பேருந்து நிலையம் பள்ளங்களால் நிறைந்துள்ளது எனவும், உ.பி.யில் உள்ள பேருந்து நிலையம் நவீனமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பதிவின் முழு உரை, “நம்பர் ஒன் கேரளா பேருந்து நிலையம் VS லக்னோ பேருந்து நிலையம் சானகா உ.பி. கீழே காணலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியா டுடே நடத்திய விசாரணையில், பரப்பப்படும் பதிவுகள் தவறானவை என்று கண்டறியப்பட்டது. வைரலான பதிவில் உள்ள பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தின் படம் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது, மேலும் பேருந்து நிலையம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. முகநூல் பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பு
உண்மை சரிபார்ப்பு:
ரிவர்ஸ் இமேஜ் சர்ச் உதவியுடன் வைரலான புகைப்பட படத்தொகுப்பை சரிபார்த்தபோது, இவற்றில் சேர்க்கப்பட்ட படங்கள் பத்தனம்திட்டா பேருந்து நிலையம் மற்றும் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அலம்பாக் பேருந்து நிலையம் ஆகியவை என கண்டறியப்பட்டது. ஆனால், கடந்த 2011ம் ஆண்டு முதல் பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும், 2018 இல் சபரிமலையில் பெண்கள் நுழைவது தொடர்பான செய்தியில் ராஷ்டிரதீபிகா இணையதளத்திலும் இதே படம் பயன்படுத்தப்பட்டது.
பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை வைரலான படத்தில் உள்ளதைப் போன்றதா என்று பின்னர் ஆய்வு செய்ததில், கீவேர்டு தேடுதலை மேற்கொண்டபோது, பத்தனம்திட்டா தனியார் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. ஆகஸ்ட் 17, 2024 அன்று முதல் கட்ட சீரமைப்புப் பணிகள் முடிந்து பத்தனம்திட்டா தனியார் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக மனோரமா ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது. கவர்ச்சிகரமான நுழைவு வாயில் மற்றும் புல்வெளி அமைக்கப்பட்டு முதல் கட்ட புனரமைப்பு மிகவும் சிறப்பான முறையில் நிறைவடைந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. அம்ருத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 5 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டு, திறப்பு விழா நாளிலேயே இரண்டாம் கட்ட சீரமைப்புப் பணிகள் தொடங்கியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
செப்டம்பர் 7, 2024 அன்று மனோரமா டிவியின் இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட பத்தனம்திட்டா தனியார் பேருந்து நிலையத்தின் படம் சேர்க்கப்பட்டது. அதை கீழே காணலாம்.
நீண்டகாலமாக சிதிலமடைந்த நிலையில் இருந்த பத்தனம்திட்டா தனியார் பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணி 2023 டிசம்பரில் தொடங்கியது. முதல் கட்ட சீரமைப்பு பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்த வீடியோ அறிக்கைகளை இங்கே பார்க்கலாம்.
உத்தரபிரதேசத்தில் பேருந்து நிலையம்
உ.பி.யின் லக்னோவில் உள்ள ஆலம்பாக் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு ஜூன் 13, 2018 அன்று திறக்கப்பட்டது. 2016ம் ஆண்டு அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது அலம்பாக் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆலம்பாக் பேருந்து நிலையம் திறப்பு விழா குறித்து அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் பகிர்ந்துள்ள பதிவில், நிலையத்தின் பல படங்கள் உள்ளன. அதை கீழே காணலாம்.
பத்தனம்திட்டா பேருந்து நிலையம் உ.பி.யில் உள்ள ஆலம்பாக் நிலையம் போல் ஆடம்பரமாக இல்லை. ஆனால் கேரளாவில் நவீன பேருந்து நிலையங்கள் உள்ளன. வைட்டிலா ஹப், திருவனந்தபுரம் மத்திய பேருந்து நிலையம், திருவல்லா, பாலக்காடு மற்றும் பல பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றின் படங்களை கீழே காணலாம்.
தற்போது வைரலான பதிவில் உள்ள பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தின் படம் 2011ஆம் ஆண்டுக்கானது என்பதும், தற்போது பத்தனம்திட்டா ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு அம்ருத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் கிடைத்துள்ள தகவல்களில் இருந்து தெரிகிறது.
Note : This story was originally published by ‘India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.