For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்ததால் சிஎஸ்கே தோல்வி’ என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

09:47 AM May 22, 2024 IST | Web Editor
‘முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்த்ததால் சிஎஸ்கே தோல்வி’ என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா
Advertisement

This News Fact Checked by  'Fact Crescendo'

Advertisement

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டை பார்க்க வந்தது தான் காரணம் என்பது போன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் புகைப்படம் தவறானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் ஐபிஎல் போட்டியைக் காணும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், “#CSK எப்போ எங்க தோத்தது தெரியுமா?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை சரிபார்ப்பு:

2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை சிஎஸ்கே இழந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் இந்த போட்டியை பார்த்தது தான் தோல்விக்குக் காரணம் என்பது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். கடைசி சுற்று ஆட்டம் பெங்களூருவில் நடந்தது. அந்த போட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை. 

அப்படி இருக்கும் போது இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்யப்பட்டது. இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடப்பட்டது. அப்போது 2023 ஏப்ரல் மாதம் சென்னை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் நடந்த போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்ததாக இந்த புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.

அந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்ற தகவலும் நமக்குக் கிடைத்தது.  ஜீ நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில், “சென்னை அணியின் வெற்றியைக் கண்ட பிறகு நிச்சயம் மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பியிருப்பார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  அது மட்டுமல்ல,  2023 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐபிஎல் போட்டியைப் பார்த்த இந்த புகைப்படம் 2023ல் எடுக்கப்பட்டது. அந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. மேலும் அந்த ஆண்டின் சாம்பியன் பட்டமும் சென்னை தான் வென்றது. அப்படி இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துரதிர்ஷ்டம் காரணமாக சென்னை அணி தோற்றது என்று கூறுவது ஆதாரமற்றது. மேலும், இந்த புகைப்படம் 2024 சென்னை – பெங்களூரு அணிக்கு இடையேயான போட்டியின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முடிவு:

சிஎஸ்கே அணி தோல்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியை காண நேரில் வந்தது தான் காரணம் என்று பகிரப்படும் புகைப்படம் 2023-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதும், வைரலாகும் இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட போட்டியில் சென்னை வெற்றி பெற்றது என்பதும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் Fact Crescendo உறுதி செய்துள்ளது.

Note : This story was originally published by ‘Fact Crescendo’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement