“இந்திய கடற்படை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து செயல்படுகிறதா?” - மாநிலங்களவையில் வைகோ கேள்வி!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
“தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மீனவர்கள் மீது தினமும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பிரதமர் இதனை கண்டிக்க வேண்டும். பிரதமர் எதற்கு இலங்கை செல்கிறார்?
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடிக்கடி செல்கிறார்கள். தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேசினார்களா?. கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அந்த விவகாரத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.
அவ்வாறு தாக்குதல்கள் நடைபெறும் போது இந்திய கடற்படை என்ன செய்துகொண்டுள்ளது?. ஆயிரக்கணக்கான மீனவர்கள் இலங்கை கடற்படையால் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இந்திய கடற்படை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து செயல்படுகிறதா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
“இந்திய கடற்படை, இலங்கை கடற்படையுடன் சேர்ந்து இந்திய மீனவர்களை தாக்கவில்லை. இந்திய மீனவர்களை இலங்கையில் இருந்து பிரதமரின் முயற்சியால் மீண்டும் இந்தியா அழைத்து வந்துள்ளோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து வைகோவின் பேச்சில் இருந்த குறிப்புகளை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று இந்திய கடற்படை குறித்த ஒரு வரியை நீக்க அவைத் துணைத் தலைவர் உத்தரவிட்டார்.