பாஜகவில் இணைகிறாரா... முன்னாள் முதலமைச்சர்? - #Jharkhand அரசியலில் பரபரப்பு!
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் சில மாதங்கள் முதலமைச்சராக பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரன் ஜூன் மாதம், ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிறிது காலம் இடைக்கால முதலமைச்சராக பொறுப்பு வகித்த சம்பாய் சோரன், முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் மன வருத்தத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் பாஜகவில் சேர உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் பகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜார்கண்ட் மாநிலத்திற்கும் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பாஜகவில் சேரப் போவதாக வெளியாகியுள்ள தகவல் ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் பாஜக தலைவர் தீபக் பிரகாஷ் அளித்த பேட்டியில் சம்பாய் சோரன் முதலமைச்சராக சிறப்பாக செயல்பட்டதாகவும், அவரது செயல்பாட்டால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இந்த நிலையில், அவர் முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என பேசியிருந்தார்.
பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான செய்திகள் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய சம்பாய் சோரன், ”இது போன்ற வதந்திகள் வெளியாகியிருப்பது தனக்கு தகவல் தும் தெரியாது என்று கூறியுள்ளார்.