எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா?- நயினார் நாகேந்திரன்!
சென்னை டி.ஜி.பி அலுவகம் முன்பு புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ,வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. தலைநகர் சென்னையில், காவல்துறை அலுவலகத்தில் வைத்தே, ஒரு கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு யார் துணிச்சல் அளித்தது? நேற்று ஒரு பேரூராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருரைக் கொலை செய்ய முயற்சித்த நிலையில், இன்று காவல்துறை அலுவகத்தில் மற்றொரு கட்சித் தலைவரைத் தாக்கியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏட்டளவில் கூட இல்லை என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
அதிலும் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினரே தாக்குதலில் ஈடுபட்டிருப்பதும், அதனைத் தடுக்க இயலாமல் காவல்துறையினர் கைகட்டி நிற்பதும், தமிழகத்தை வன்முறைப் பாதையில் அழைத்துச் செல்வது தான் திமுக அரசின் திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சியைச் சார்ந்தோர் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், இனியாவது சட்டம் ஒழுங்கை சீர்செய்ய அரசு முன்வர வேண்டும். மேலும், எந்தவொரு அரசியல் சார்புமின்றி ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைத் தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்"
என்று தெரிவித்தார்.