பயிர் சேத இழப்பீடு வழங்காமல் துரோகம் செய்வது தான் திராவிட மாடல் கொள்கையா? - அன்புமணி ராமதாஸ்!
பாட்டளி மக்கள் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் சேதமடைந்த ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு வழங்கப்படவில்லை. உழவர்கள் கடன் வாங்கி விளைவித்த பயிர்கள் சேதமடைந்த நிலையில், அவற்றுக்கான இழப்பீட்டைக் கூட வழங்க திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது 40 ஆயிரத்துக்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. அதைத் தொடர்ந்து நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்களும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் போது என்னை சந்தித்த விவசாயிகள் சங்கத் தலைவர்கள், நெற்பயிர்கள் பாதிகப்பட்டு 9 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை தங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இந்தத் தகவல் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மொத்தம் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால், அதில் மூன்றில் இரு பங்கு, அதாவது ஒரு லட்சத்து 5 ஏக்கர் பரப்பளவிலான பயிர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரியிருந்த நிலையில், ஏக்கருக்கு வெறும் ரூ.6800 மட்டும் தான் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை, அதுவும் அரைகுறையாக அறிவித்த இழப்பீட்டைக் கூட ஒன்பது மாதங்களாக வழங்காமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா? என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும், நடப்பாண்டு ஜனவரி மாதத்திலும் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் உடனடியாக இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.