“தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பது ஸ்டாலினா? உதயநிதி ஸ்டாலினா?” - ஆர்.பி. உதயகுமார் கேள்வி!
சவால் விடுத்தது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்றால், பதில் சொல்வது உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பது ஸ்டாலினா, உதயநிதி ஸ்டாலினா? என எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், அதிமுக உசிலம்பட்டி ஒன்றிய அளவிலான செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்,
மூன்று ஆண்டுகளில் திமுக அரசு 234 தொகுதிகளுக்கும், மக்களுக்கும் என்ன திட்டங்களை
கொடுத்தீர்கள்? என விவாதம் செய்ய முதலமைச்சருக்கு, எதிர்கட்சி தலைவர் சவால் விட்டால், ஒன்று முதலமைச்சர் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை சவாலை மறுக்க வேண்டும். இன்று அந்த சவாலுக்கு உதயநிதி ஸ்டாலின் நான் வருகிறேன் என சொல்கிறார்.
சவால் விடுத்தது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்று சொன்னால், பதில் சொல்வது உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பது ஸ்டாலினா? உதயநிதி ஸ்டாலினா? என மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரனாகவும், ஸ்டாலினின் மகனாகவும் உதயநிதி இல்லையென்றால், ஒரு கவுன்சிலராக கூட வெற்றிப் பெற்றிருக்க முடியாது. எல்லா அரசு திட்டத்திற்கும் கருணாநிதி பெயரை சூட்டுவது நியாயமா? மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் கருணாநிதி பெயரில் அமைக்கப்பட்டது வீணாகிய திட்டமா? என மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
அங்கு எங்கு ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஜல்லிக்கட்டு என்றால் மண்ணின் மைந்தர்கள் ஒன்று கூட எங்கள் ஊர் அலங்காநல்லூரில் நடத்துகிறதுதான் ஜல்லிக்கட்டு. அந்த வாடிவாசல் என்றால் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. அதனால் அது வீணாகி போன திட்டம். அதைத்தான், மக்கள் வரிப்பணத்தை இப்படி வாரி இறைத்து கருணாநிதி பெயரை சூட்டுவது நியாயமா? என எடப்பாடி பழனிசாமி கேட்டார்.
திமுக கட்சி செய்யும் அட்டூழியத்திற்கு வேறு எந்த கட்சியும் வாய் திறப்பதில்லை. ஒரு நாள் இந்த ஊடகங்கள் திமுகவிற்கு எதிராக திரும்பினால் அந்த நிமிடமே திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என எடப்பாடி பழனிசாமி சென்னார். 100 நாள் வேலை திட்டத்திற்கு கூட சம்பளம் போட முடியாத நிலையில் திமுகவின் ஆட்சி இருக்கிறது”. இவ்வாறுப் பேசினார்.