Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கை அதிபர் #AnuraKumaraDissanayake .. மாற்றத்தின் நாயகரா? மற்றுமொரு அதிபரா? உற்று நோக்கும் உலகத் தமிழர்கள்!

07:54 PM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

”பல நூற்றாண்டு கனவு இன்று நனவாகியுள்ளது. இந்த சாதனை எந்தவொரு தனி நபருக்கும் சொந்தமானதல்ல. உங்களின் கூட்டு முயற்சியால், சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றி நம் அனைவருக்குமானது. அதற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம். புதிய மறுமலர்ச்சியை படைப்போம்.’ என்று இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

Advertisement

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 39 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்து விட 38 பேர் களத்தில் நின்றனர். ஆனால், இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இடையிலான மும்முனைப் போட்டியே களத்தில் நிலவியது. இறுதியில், கடந்த 2019 அதிபர் தேர்தலில் 3% வாக்கு பெற்றிருந்த, அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றி அதிபராகியுள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன்?

எதிர்க் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ மீண்டும் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறார். ரணில் விக்ரமசிங்க 3வது இடத்தையும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ 4வது இடத்தையும், தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 5வது இடத்தையும் பிடித்துள்ளார்.

வெற்றி பெற வாய்ப்பில்லை என்றாலும், “தங்களுக்கான சம உரிமை, இறைமையை சர்வதேசத்திற்கும் இலங்கைக்கும் வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகவே தேர்தலில் போட்டியிடுவதாக’’ என்றும் தெரிவித்திருந்தனர். வாக்குகள் கொஞ்சம் சிதறியிருந்தாலும், "தமிழ்ப் பொதுக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒரு குறியீடாகத்தான் நிறுத்தப்பட்டார். இது கட்சிகளைக் கடந்து தமிழ் மக்களை ஒன்றிணைத்திருக்கிறது" என்கிறார்கள்.

அநுர மீதான எதிர்பார்ப்பு

இந்நிலையில்தான் ஊழல் ஒழிப்பு மற்றும் சீர்திருத்த முழக்கங்களை முன் வைத்து வெற்றி பெற்று அதிபராகியுள்ள அநுர மீதான எதிர்ப்பார்ப்புகளும் விமர்சனங்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன. மார்க்ஸிய, லெனிய சித்தாந்தம் உடைய கட்சியாக இருந்தாலும் தீவிர சிங்கள பேரினவாத கட்சியாகவும் ஜன விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி) பார்க்கப்படுகிறது. அந்த கட்சியின் தலைவராகவும் இருந்து தேர்தலில் போட்டியிட்டு, அதிபராகியுள்ளார் அநுர குமார திசாநாயக்க. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் உறவு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, மக்களின் எதிர்ப்பார்ப்புகள் உள்ளிட்டவைகள் ஒருபக்கம் இருக்க, 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் சிறுபான்மை தமிழர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பாரா..? மாற்றத்தை கொடுக்கும் தலைவரா? இவர் மற்றுமொரு இனவாத தலைவரா? அதிபரின் அணுமுறை மாறுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது.

ஜெ.வி.பியின் கடந்த கால கசப்புகள்

இந்த கேள்விகளுக்கு பின்னாலும் அநுர சார்ந்திருக்கும் கட்சியின் வரலாறும் இருக்கிறது. குறிப்பாக, புரட்சிகர அமைப்பாக தொடங்கி ஜனநாயகரீதியில் அரசியல் கட்சியாக உருவான ஜெ.வி.பி.யினரால், கடந்த 1971இல் பண்டாரநாயக அரசுக்கு எதிரான கலகத்தில், ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். கடந்த 1987 - 89 காலகட்டங்களில், இந்தியா - இலங்கை அமைதி ஒப்பந்தத்திற்கு எதிரான கலகத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையையும் கடுமையாக எதிர்த்தனர். கடந்த 2004ல் தேர்தலுக்கு பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியின் கூட்டணி அரசில் ஜெ.வி.பியும் இடம் பெற்றது. ஆனால், சுனாமிக்குப் பிறகு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சந்திரிகா குமாரதுங்க அரசு முடிவு செய்தது. இதற்கு எதிப்பு தெரிவித்து, அக்கட்சியின் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் பதவி விலகினர்.

இது போன்ற அன்றைய பின்னணிகளால், இன்றைய அதிபர் மீதான சந்தேகம் நீங்கவில்லை. எனவே, ’’இடதுசாரி சிந்தனை உள்ள தலைவராக காட்டிக் கொண்டாலும் அவரும் ஒரு சிங்கள பேரினவாதிதான்’’என்கிறார் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர். அதேநேரத்தில், கடந்த 2014இல் அக்கட்சியின் தலைவரான பிறகு அநுர அளித்த ஒரு பேட்டியில், ஜெ.வி.பியின் கடந்த கால வன்முறைகளுக்காக மன்னிப்பு கோரினார். அப்படி அவர் மன்னிப்பு கோரியது அதுவே முதலும் கடைசியுமாக இருக்கிறது என்கிறார்கள் இலங்கை பத்திரிகையாளர்கள்.

மாகாணங்களுக்கு அதிகாரம் கிடைக்குமா?

மேலும், அண்டை நாடான இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிப்பதற்காக 13வது சட்டத் திருத்தம் இலங்கையின் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, நிலம், காவல் மற்றும் நிதி தொடர்பாகக் கூடுதல் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு அளிக்கப்படும் என்பதை பல தமிழ்க் கட்சிகள், அமைப்புகள் ஏற்கவில்லை. ஆனாலும், தற்போது வரை மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தில் அநுர பேசுகையில், ’’13வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்துவேன். எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கவில்லை. அதற்காகவும் நான் இங்கு வரவில்லை. கூட்டாட்சி முறையை அளிக்கிறேன், எனக்கு வாக்களியுங்கள் என்றும் கேட்க வரவில்லை" என்றார். கடந்த ஜூன் மாதத்தில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்தார். அப்போது, மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படும் என்றவர், அவைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது குறித்து எதையும் சொல்லவில்லை. அதிகாரப் பகிர்வை அவரது கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்கிறார்கள்.

இலங்கையின் புதிய அதிபர், இடைக்கால பிரதமர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். வடக்கு - கிழக்கு பகுதி தமிழ் அரசியல் கட்சிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ் மக்கள் பொது சபையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அதேநேரத்தில், “தமிழ் மக்களின் இறைமையையும் சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரித்தால்தான், இலங்கையின் பல்லினச் சூழலைப் பாதுகாக்கலாம்’’என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை மக்களால் கொண்டாடப்பட்ட ராஜபக்ஸ சகோதரர்கள், இன்றைக்கு அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. மூத்த தலைவர்களும் பாரம்பரிய கட்சிகளையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். மாற்றத்தை முன்வைத்த அநுர குமார திசாநாயக்க கொண்டாடப்படுகிறார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராணுவத்திற்கு அளவுக்கு அதிமாக செலவிட்டது முக்கிய காரணமாக இருக்கிறது. இப்போதும் தமிழர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகம்.

ராணுவத்திற்கு அதிகம் செலவிட உள்நாட்டில் ஏற்பட்ட போர் காரணம். உள்நாட்டுப் போருக்கு காரணம் சிங்கள பேரினவாதம் என்று ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். அநுர குமார திசாநாயக்க இலங்கையின் அதிபரானதும், ‘’ஒன்றிணைந்து எதிர்காலத்தை கட்டமைப்போம். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்’’ என்றும் தெரிவித்துள்ளார். அணுகுமுறையை மாற்றி, தமிழர்களுக்கு அதிகாரமளிக்கும் மாற்று தலைவரா…? பேரினவாதத்தை தொடரும் மற்றுமொரு அதிபரா…? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்….

Tags :
Anura Kumara DissanayakeJVPNews7TamilNPPPresidentSrilankaSriLanka Elections
Advertisement
Next Article